




போதகா் பெய்லியின் புதிய நண்பர், அவரது வாழ்க்கையில் சந்தித்த துஷ்பிரயோகங்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கதையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞன் இயேசுவின் விசுவாசியாக இருந்தபோதிலும், சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டவனாயிருந்ததினால், அவனுடைய வயதிற்கு மிஞ்சிய பிரச்சனைகளை அந்த பருவத்தில் அவன் சந்திக்க நேரிட்டது. அவனுடைய அந்த இக்கட்டான வாழ்க்கை தருணத்தில் அந்த போதகர் அவனுக்கு உதவிசெய்தார்.
கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகளுடன் போரிடுகிறோம் (2 கொரிந்தியர் 10:3-6). ஆனால் நமது ஆவிக்குரிய யுத்தங்களை போராடுவதற்கு நமக்கு யுத்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை உலகத்தின் ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவைகள் “அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (வச. 4). அதற்கு என்ன பொருள்? “அரண்கள்” என்பது நன்கு கட்டப்பட்ட, பாதுகாப்பான இடங்கள். நமது தேவன் கொடுத்த ஆயுதங்களில், “நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருந்து எதிரியை தாக்கவும் அவனிடம் இருந்து பாதுகாக்கிறதிலும்” (6:7) நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போம். எபேசியர் 6:13-18, வேதம், விசுவாசம், இரட்சிப்பு, ஜெபம் மற்றும் பிற விசுவாசிகளின் ஆதரவு உட்பட நம்மைப் பாதுகாக்க உதவும் காரியங்களின் பட்டியலை விரிவுபடுத்துகிறது. நம்மை விட பெரிய மற்றும் வலிமையான சக்திகளை எதிர்கொள்ளும்போது, இந்த ஆவிக்குரிய ஆயுதங்களை கையகப்படுத்துவது, நிற்பதற்கும் தடுமாறுவதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும். தனியாகச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய சக்திகளுடன் போராடுபவர்களுக்கு உதவ தேவன் ஆலோசகர்களையும், பல நிபுணர்களையும் பயன்படுத்துகிறார். நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவின் மூலமாக நாம் போராடும் போது, நாம் முடங்கிப்போக அவசியமில்லை. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் நம்மிடத்தில் இருக்கிறது!
என் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு நீண்டகால நண்பர் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்: “(ஆலன்) ... தேவனுடன் போராடுபவர். அவர் ஒரு உண்மையான யாக்கோபு. மேலும் நான் இன்று ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு அவர் ஒரு வலுவான காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. ஆலனின் போராட்டங்களை முற்பிதாவான யாக்கோபுடன் ஒப்பிட நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால் அது சரியாய் பொருந்துகிறது. தனது வாழ்நாள் முழுவதும், ஆலன் தனியாக, பதில்களுக்காக தேவனுடனும் போராடினார்;. அவர் தேவனை நேசித்தார்; ஆனால் தேவன் அவரை நேசிக்கிறார், மன்னிக்கிறார் மற்றும் அவருடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்னும் சத்தியங்களை விளங்கிக்கொள்ள முடியாமல் சிலவேளைகளில் போராடினார். ஆயினும்கூட, அவரது வாழ்க்கை அதன் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தது. அவர் பலரை நேர்மறையாய் ஊக்கப்படுத்தினார்.
யாக்கோபின் வாழ்க்கையானது போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவன் தன் சகோதரன் ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற தீர்மானித்தான். அவன் வீட்டை விட்டு ஓடிப்போய், தனது உறவினர் மற்றும் மாமனாருமான லாபானுடன் பல ஆண்டுகளாக போராடினான். பிறகு லாபானை விட்டு தப்பி ஓடினான். அவன் தனிமையில் ஏசாவை சந்திக்க பயந்தான். ஆயினும்கூட, அவனுக்கு பரலோக தரிசனம் கிடைத்தது. “தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (ஆதியாகமம் 32:1). இது ஒருவேளை தேவனிடமிருந்து அவர் பெற்ற முந்தைய தரிசனத்தின் நினைவூட்டலாக இருக்கலாம் (28:10-22). இப்போது யாக்கோபு வேறொரு தெய்வீக நபரை சந்திக்கிறார்: இரவு முழுவதும் அவர் ஒரு “மனிதனுடன்” போராடினார். மனித உருவில் இருந்த தேவனுடைய பிரதிநிதியான அந்த தெய்வீக நபர், “தேவனோடும் மனிதரோடும் போராடி” (32:28) மேற்கொண்டான் என்பதினால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்கிறார். இவையெல்லாவற்றிலும் தேவன் யாக்கோபோடு இருந்து அவனை நேசித்தார். நம் அனைவருக்கும் போராட்டங்கள் உள்ளன. ஆனால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு சோதனையிலும் தேவன் நம்முடன் இருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மன்னிக்கப் படுகிறார்கள், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கின்றனர் (யோவான் 3:16). நாம் அவரைப் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.
நீலகிரி மலைகளில் ஏறும் போது யூகலிப்டஸ் தைல மரங்களின் இனிமையான வாசனை உங்கள் உணர்வுகளை நிரப்புகிறது. ஆனால் தைல மரம் இந்த மலைகளுக்குச் சொந்தமானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலேய வணிகர்களுக்கு கோடைக்காலத்தைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதற்காகக் காலனித்துவ காலத்தில் பயிரிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இனமாகும். அப்பாவித்தனமாய் தோன்றும் ஒரு செயல் இப்போது சூழலியலில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் விலங்குகள் அதன் விஷ இலைகளைச் சாப்பிட முடியாது. உணவு தேடி வயல்கள் மற்றும் பயிர்களை இவை தாக்குகின்றன, இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இவற்றைத் திருப்பி தாக்குகின்றனர். பூர்வீக வகை தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முந்தைய தவறுகள் இன்னும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கலாத்திய சபைக்கு நிருபம் எழுதியவர், மாம்ச இச்சையைத் திருப்திப்படுத்துவதற்கு எதிராக அவர்களை எச்சரிக்கிறார் (வ.16). விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (வ.19-21) போன்றவை மாம்ச இச்சைகள் என்று அவர் வரையறுக்கிறார். ஒரு ஆக்கிரமிப்பு இனத்தைப் போலவே, இந்த வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாத பாவங்கள் வேரூன்றி, இறுதியில் நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனினும், நாம் "ஆவிக்கேற்றபடி" நடந்துகொண்டால் மேற்கொள்ள முடியும் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வ.17). அப்போது நாம் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய கனிகளைக் கொடுப்போம் (வ.22-23).
பாவத்தின் ஆக்கிரமிப்பு விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு நமக்காக அனுப்பிய ஆவியானவர், சரியான பாதையில் நடக்க நமக்கு உதவ வல்லவர் (2 கொரிந்தியர் 5:5). மாம்சமும் ஆவியும் எப்போதும் முரண்படுவதால் முதலில் கடினமாக இருக்கலாம் (வ.17), ஆனால் இயேசுவில் நாம் பாவத்தின் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முடியும்.